Thursday, May 13, 2010

தமிழச்சாதி ஒரு குவலயக் குடும்பம்.

இன்றும் நீங்கள் எதுபற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்?


ஈழத்தில் வாழும் என் உடன் பிறப்புக்கள் பள்ளிக்குப் போக முடியவில்லையே, பட்டம் பெறமுடியவில்லையே, பணம் சம்பாதிக்க முடியவில்லையே, பகட்டான வாழ்க்கை வாழமுடியவில்லையே, பகலிரவு பார்க்காமல் நிம்மதியாகத் தூங்க முடியவில்லையே, எனப் பதறிக்கொண்டிருக்கின்றன.

உலகத் தமிழர்களே நீங்கள் ஈழத்தில் தமிழன் இழந்துக் கொண்டிருப்பதை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் ஈழத் தமிழனுக்கும் இந்திய தமிழனுக்கும், உலகெங்கும் வாழும் எல்லாத் தமிழனுக்கும் சொல்கிறேன். இது உன்னைப் பற்றி நினைக்கும் நேரமில்லை. உன் இனத்தைப் பற்றி நினைக்க வேண்டிய நேரம்.

தன் இனத்தையும் தாய்மொழியையும் பலியிட்டாவது தன்னலத்தைக் காப்பற்றிக் கொள்ளவேண்டும் என நம்மவரில் பலர் மோதிக்கொண்டிக்கின்றனர்.

என் இனம் இல்லாமல், என் மொழியில்லாமல் நான் மட்டும் எப்படி இருக்க முடியும். இந்த நல்லறிவு கூட இல்லாதவர்கள் அவர்கள்.

தமிழா! நீயும் அப்படி இருந்துவிடகூடாது. நம்மினம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய பண்பாட்டையும் நாட்டையும் உடையதாக இருந்தாலும், கடந்த 1200 ஆண்டுகளுக்கு மேலாக அன்னியரால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனக்கென்று ஒரு தனியரசு இல்லாமல் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இலங்கையில் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராக 60 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் இறுதிக் கட்டமாக இனமொழிப்பு என்ற முயற்சியில் சிங்களப் பேரினவாதம் ஈடுபட்டுள்ளது.
எல்லாத் தமிழனும் தன்னுடைய சுயநல வாழ்வை அதாவது வழக்கமான வாழ்வை ஒத்திவைத்து ஈழத்தமிழின விடுதலைக்காக, இனமொழிப்புக்கு எதிராக, தமிழினத் தாயக மீட்புக்காக, தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் ஆண்ட இனம் மீண்டும் ஆளும் நிலை உண்டாகும். தாழ்ந்த இனம் மீண்டும் தலை நிமிரும். மாண்ட நம் போராளிகளின் மரணத்திற்கு அர்த்தம் உண்டாகும்.

மறுவீடு தேடிப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் மனங்களின் உறுதி உண்டாகும். இவற்றுக்கெல்லாம் மேலாக உண்மையும் நீதியும் வென்றிட தமிழனின் சுதந்திரப் போராட்டம் வகை செய்ததே என்ற உலகப் பெருமையும் உண்டாகும்.

என் இனிய தமிழ் உடன்பிறப்புகளே! மறுபடியும் சொல்கிறேன். மறக்க வேண்டாம். மறைந்து போகும் உங்கள் வாழ்விற்கு ஓர் அர்த்தத்தைத் தேட, மறக்க வேண்டாம். நம்முடைய உடனடித் தேவை கல்வியல்ல, பட்டங்கள் அல்ல, செல்வமல்ல, பதவிகள் அல்ல, ஈழத்தில் நம்மினத்திற்கென ஒரு தாயகம்.

அதை நினைவில் நிறுத்து.

மலரும் நமக்கொரு தாயகம்.

அதன் பின் மங்காத புகழோடு நாம் அங்கே வாழலாம்.

உலகத் தமிழினம் ஓர் இனம்.

தமிழச்சாதி ஒரு குவலயக் குடும்பம்.

No comments:

Post a Comment