Wednesday, May 19, 2010

நாம் தமிழர்' முத்துக்குமாரின் பெற்றோர் இயக்க கொடியை ஏற்றி வைத்தனர்.

மதுரை, மே.19-


அனைத்து துறைகளிலும் தமிழே ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று `நாம் தமிழர்' இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

மதுரை விரகனூர் அருகில் உள்ள ரிங் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நேற்று நாம் தமிழர் இயக்க மாநாடு நடந்தது. மாநாட்டையொட்டி, காலையில் தெப்பக்குளம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. விரகனூர், ரிங் ரோடு வழியாக மாநாட்டு திடலை பேரணி அடைந்தது.

மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தமிழருவி மணியன், நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏந்தி மாநாட்டை தொடங்கி வைத்தனர். முத்துக்குமாரின் பெற்றோர் இயக்க கொடியை ஏற்றி வைத்தனர்.

தீர்மானங்கள்

சீமான், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, தமிழருவி மணியன், பேராசிரியர் தீரன், சாகுல் அமீது உள்பட பலர் மாநாட்டில் பேசினார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உலகில் போர்யுத்தம் நடைபெறும் நாடுகள் பற்றி ஆய்வு செய்யும் அமைப்பான சர்வதேச நெருக்கடி ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசை இனப்படுகொலை செய்த அரசாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

குடியுரிமை

எண்ணற்ற உயிர் தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் செய்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக தாயக விடுதலைக்காக போராடி வரும் ஈழத்து மக்களுக்கு தனி தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு கிடையாது. மத்திய அரசு தமிழ் ஈழத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.

ஐந்தாறு தலைமுறைகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் 1.5 லட்சம் குழந்தைகள் உள்ளிட்ட 4.5 லட்சம் மலேசிய தமிழர்களுக்கும் மலேசிய அரசியல் சாசன பிரிவுகளில் கண்டவாறு குடியுரிமை வழங்க மத்திய அரசு மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்.

அகதிகள்

இந்தியாவில் வாழும் திபெத்திய அகதிகளுக்கு வழங்கப்படுவது போல அனைத்து உரிமைகளையும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சிறப்பு முகாம் என்ற பெயரில் நடத்தும் அனைத்தும் முகாம்களையும் கலைத்து விட்டு ஈழத்தமிழர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்.

காலக்கெடு எதுவும் இல்லாமல் உரிய தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் வாடும் நளினி, பொழிலன், குனங்குடி அனீபா உள்பட சிறையாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

தமிழே ஆட்சி மொழி

தமிழில் படித்தோருக்கு மட்டுமே தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு, அனைத்து துறையிலும் தமிழே ஆட்சி மொழி, அனைத்து படிப்பிலும் தமிழே பயிற்று மொழி, வழிபாட்டு தலங்களில் தமிழே வழிபாட்டு மொழி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நலிந்து வரும் வியாபாரத்தை லாபகரமாக்கிடவும், நிலம், வீடு, காற்று மாசு அடைவதை தடுக்கவும், தரமான உணவு உற்பத்தி செய்திடவும், நோய்க்கு காரணமான ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை வழி விவசாயத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த உத்தரவிடுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment